345 கடல் மைல் தூரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி

இலங்கையின் தென்கிழக்கில் உள்ள பெரிய ராவண கலங்கரை விளக்கத்திலிருந்து (Great Basses) சுமார் 345 கடல் மைல் (சுமார் 638 கி.மீ) தூரத்தில் நடைபெற்ற விபத்தொன்றால் காயமடைந்த இலங்கை பல நாள் மீன்பிடி படகொன்றில் மீனவரை சிகிச்சைக்காக கரக்கு கொண்டு வர இலங்கை கடற்படை கப்பல் 'சயுர' அனுப்பட்டதுடன் இன்று (ஜூன் 4, 2021) காலை 1130 மணியளவில் கப்பலால் நோயாளியை மீட்டெடுத்து முதலுதவி தொடங்கப்பட்டது.

2021 ஏப்ரல் 21 ஆம் திகதி தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஆறு (06) மீனவர்களைக் கொண்ட ‘தூ பாஷி' (பதிவு எண் IMUL-A-0928 MTR) என்ற மீன்பிடி படகில் ஏற்பட்ட திடிர் விபத்தால் ஒரு மீனவரின் கால் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கடற்படை தலைமையகத்தில் உள்ள கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்திற்கு மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த அறிவிப்புக்கு கடற்படை உடனடியாக பதிலளித்து, காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக அழைத்து வர இலங்கை கடற்படைக் கப்பலான 'சயுர' அனுப்பியது. இலங்கை கடற்படை கப்பல் 'சயுர' தற்போது பாதிக்கப்பட்ட மீனவருக்கு தேவையான முதலுதவி அளித்து ஆழ்கடலில் இருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துகொண்டு இருக்கிறது. குறித்த கப்பல் நாளை காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் பாதிக்கப்பட்டுள்ள கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.