பலநாள் படகில் இருந்து தவறி விழுந்து 18 மணி நேரத்திற்கும் மேலாக கடலில் தத்தளித்த மீனவரை கடற்படையினர் மீட்டனர்

2022 ஜனவரி 08 ஆம் திகதி பிற்பகல் தங்காலை கடற்பரப்பில் 'லக்விது 3' என்ற பல நாள் மீன்பிடி படகில் இருந்து கடலில் விழுந்த மீனவர் ஒருவர் இன்று (2022 ஜனவரி 09) கடற்படையின் A 543 கப்பலினால் மீட்கப்பட்டு காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

2022 ஜனவரி 07 ஆம் திகதி காலி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆறு (06) மீனவர்களுடன் கடலுக்கு சென்ற 'லக்விது 3' (பதிவு எண். IMUL-A-0315-TLE) என்ற பல நாள் மீன்பிடிப் படகில் இருந்த ஒரு மீனவர் கடந்த 2022 ஜனவரி 08 ஆம் திகதி பிற்பகல் 0130 மணியளவில் தங்காலையிலிருந்து 08 கடல் மைல் (15 கிலோமீற்றர்) தொலைவில் தெற்கு கடற்பரப்பில் மீன்பிடி இழுவைப்படகில் இருந்து கடலில் விழுந்து காணாமல் போனதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம், கடற்படைத் தலைமையகத்தில் நிலைகொண்டுள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திடம் தெரிவித்துடன் குறித்த மீனவரை தேடுவதற்கு உதவுமாறும் கோரியுள்ளது.

இந்த கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த கடற்படையினர், தங்காலை முதல் காலி வரையிலான கடற்பகுதியில் தென் கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்தி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இது தவிர, அப்பகுதியில் உள்ள மற்ற மீன்பிடி கப்பல்கள் மற்றும் படகுகளுக்கும் இச்சம்பவத்தைத் குறித்து தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இன்று (2022 ஜனவரி 09) காலை 0800 மணியளவில் காலியில் இருந்து 07 கடல் மைல் (13 கிமீ) தொலைவில் தெற்கு கடற்பகுதியில் மிதவையின் உதவியுடன் தத்தளித்துக் கொண்டுள்ள மீனவரை கண்டுபிடிக்கப்பட்டு, தெற்கு கடற்படை கட்டளைக் கப்பலான A543 மூலம் மீட்கப்பட்டது. சுமார் 18 மணித்தியாலங்களுக்கு மேலாக நீரில் மிதந்து ஆபத்தான நிலையில் இருந்த இந்த மீனவருக்கு ஏ543 கப்பலில் வைத்து தேவையான முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் தெற்கு கடற்படை கட்டளையின் பி107 கடலோர காவல்படை கப்பலின் மேற்பார்வையில் கரைக்கு அழைத்து வரப்பட்டது. அதன் பின் மேலதிக சிகிச்சைக்காக கடற்படை மருத்துவ பணியாளர்கள் அவரை காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

கடற்படை தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், கடலில் எதிர்பாராத ஆபத்துக்களால் பாதிக்கப்படும் கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக இதுபோன்ற மீட்பு நடவடிக்கைகளை மேலும் ஒருங்கிணைக்க எப்போதும் விழிப்புடன் மற்றும் உறுதியுடன் உள்ளது.