சட்டவிரோத போதைப்பொருட்கள் கொண்ட ஒருவர் மன்னாரில் கைது

மன்னார், பேசாலை பகுதியில் 2022 ஏப்ரல் 2 ஆம் திகதி இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 563 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் (Crystal Methamphetamine) சந்தேகநபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் கடற்படையினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவனத்தின் கடற்படையினர் மன்னார் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து 2022 ஏப்ரல் 2 ஆம் திகதி மன்னார் தொட்டக்காடு பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டை சோதனையிட்ட அவர்கள், குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 563 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் (Crystal Methamphetamine) சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் தெரு மதிப்பு ரூ.4.5 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.