சர்வதேச கடற்பரப்பில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைந்து 2022 மே 05 ஆம் திகதி இலங்கைக்கு தெற்கு சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கையின் மூலம் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 240 கிலோகிராம் போதைப்பொருளுடன் ஏழு வெளிநாட்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

இலங்கை கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் உதவியுடன் இலங்கை கடற்படையின் சயுரல என்ற ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் சுமார் மூன்று (03) வாரங்களாக விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டதுடன் அப்போது நிலப்பரப்பில் இருந்து சுமார் 630 கடல் மைல் (சுமார் 1166 கி.மீ.) தொலைவில் இலங்கைக்கு தெற்கு சர்வதேச கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையற்ற வெளிநாட்டு மீன்பிடிக் கப்பலொன்றை சயுரல கப்பல் கண்டறிந்தது.

அங்கு, சந்தேகத்திற்கிடமான கப்பலை ஆய்வு செய்ய கப்பலை நிறுத்த உத்தரவிடப்பட்ட பின் குறித்த கப்பல் தப்பிச் செல்ல முயன்றபோது, சந்தேகத்தின் முன்னோக்கிப் பாதையை இலக்காகக் கொண்டு சயுரல கப்பல் முலம் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் கப்பல் தொடர்ந்து தப்பிச் சென்றதால் சந்தேகத்திற்கிடமான கப்பலைத் துரத்திச் சென்ற கடற்படையினர் குறித்த கப்பலில் ஏறி 07 வெளிநாட்டு சந்தேக நபர்களையும், 08 சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்ட 220 பொதிகளில் உள்ள ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 240 கிலோகிராம் போதைப் பொருட்களையும் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் வகை மற்றும் அளவு குறித்த சரியான தகவல்கள் கரைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் சரிபார்க்கப்படும்.

கப்பல் கடற்படையினரால் கரைக்கு கொண்டு வருகின்ற போது கப்பலில் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக கசிவு ஏற்பட்டு 2022 மே 07 அன்று கடலில் மூழ்கியது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் 07 வெளிநாட்டு சந்தேக நபர்களும் சயுரல கப்பல் மூலம் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களால் பல நாள் மீன்பிடித்தல் என்ற போர்வையில், போதைப்பொருளை கடத்துவதற்குப் பயன்படுத்தப்படும் மீன்பிடிப் படகுகளுக்கு சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் வழங்கி நாட்டிற்கு கொண்டு வருவதற்காக இந்த போதைப்பொருள் கொண்ட கப்பல் சர்வதேச கடற்பரப்பில் நிறுத்தி வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதேவேளை, நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் மொத்த வீதி பெறுமதி 4800 மில்லியன் ரூபாவுக்கும் மேல் என நம்பப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட வெளிநாட்டு சந்தேக நபர்களின் அடையாளங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகள் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினால் மேற்கொள்ளப்படும்.

மேலும், கடந்த 2022 ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை கடற்படை, இலங்கை கடலோரக் காவல்படை, அரச புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் இணைந்து காலி, தொடந்துவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற நடவடிக்கையில், கடல் வழியாக இலங்கைக்கு கொண்டு வர முயச்சித்த சுமார் 330 கிலோ 532 கிராம் ஹெராயின் மற்றும் சுமார் 09 கிலோ 818 கிராம் ஐஸ் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற உள்ளூர் மீன்பிடிப் படகொன்றுடன் ஒரு டிங்கி படகு, கெப் வண்டி மற்றும் முச்சக்கர வண்டியுடன் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.