சர்வதேச கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப் பொருட்களை கடற்படைத் தளபதி பார்வையிட்டார்.

இலங்கை கடற்படையினர், இலங்கைக்கு தெற்கு சர்வதேச கடற்பரப்பில் 2022 மே 05 ஆம் திகதி மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஏழு வெளிநாட்டு சந்தேக நபர்களை இன்று காலை (2022 மே 09) இலங்கை கடற்படை கப்பல் சயுரல மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் இந்நிகழ்வைக் கண்காணிப்பதற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

இதன்படி, கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட எட்டு (08) பைகளில் 220 பொதிகளாக பொதி செய்யப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் எடை 242 கிலோ 052 கிராம் (பொதிகளின் எடை உட்பட) என்று உறுதிப்படுத்தப்பட்டதுடன் அத்தொகையின் மொத்த வீதி மதிப்பு ரூபா 4861 மில்லியனுக்கும் அதிகமாகும் என நம்பப்படுகிறது. இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட வெளிநாட்டு சந்தேக நபர்கள் மற்றும் போதைப்பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று (2022 மே 09) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப் பொருட்களை பரிசோதித்த இலங்கை கடற்படைத் தளபதி, இலங்கை கடற்படைக் கப்பல் சயுரலவின் கட்டளை அதிகாரி மற்றும் முழு குழுவினரையும் பாராட்டியதுடன், மேலும் ஒரு பெரிய அளவிலான சட்டவிரோத போதைப்பொருள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதில் அவர்களின் பங்களிப்பை பாராட்டினார்.

மேலும், போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து இல்லாதொழிக்கும் தேசிய அபிலாஷையை அடைவதற்கான நாட்டின் முதல் பாதுகாப்பு வளையமாக தனது கடமையை இலங்கையின் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை கடற்படை தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.