சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயன்று உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட 55 பேர் ஆழ்கடலில் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்

ஹம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 390 கடல் மைல் (சுமார் 722 கி.மீ) தொலைவில், இலங்கைக்கு தென்கிழக்கு பகுதி ஆழ்கடலில் வீசிய புயலில் சிக்கி பாதிக்கப்பட்ட உள்நாட்டு பல நாள் மீன்பிடிக் கப்பலில் உயிருக்கு ஆபத்தில் இருந்த சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 55 பேர் இலங்கை கடற்படையினரால் 2022 ஜூலை 10ஆம் திகதி மீட்கப்பட்டதுடன், அவர்களை இன்று (2022 ஜூலை 12) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டனர்.

அதன்படி, 2022 ஜூலை 08 ஆம் திகதி கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் இலங்கையின் தென்கிழக்கு ஆழ்கடல் பகுதியில் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று மிதப்பதாகவும் குறித்த கப்பலுக்கு தேவையான நிவாரணம் வழங்கிட நன்கொடை வழங்குமாறும் கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்குத் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு உடனடியாக பதிலளித்த கடற்படையினர், இலங்கை கடற்படையின் பராக்கிரமபாஹு கப்பலை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக விபத்துக்குள்ளான மீன்பிடி கப்பல் உள்ள கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்படி, 2022 ஜூலை 10 ஆம் திகதி காலை பராக்கிரமபாஹு கப்பல் பாதிக்கப்பட்ட மீன்பிடிக் கப்பல் உள்ள கடல் பகுதிக்கு சென்றடைந்து குறித்த பல நாள் மீன்பிடிக் கப்பலை ஆய்வு செய்தது. சோதனையின் போது, பல நாள் மீன்பிடி கப்பல் மிகவும் அபாயகரமான முறையில் கரடுமுரடான கடற்பரப்பில் சென்றுகொண்டிருந்ததை உணர்ந்த கடற்படையினர், சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 05 ஆட்கடத்தல்காரர்களுடன் 46 ஆண்கள், 03 பெண்கள் மற்றும் 06 குழந்தைகள் உட்பட 55 நபர்களை மீட்டு உடனடியாக கரைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனைகளின் போது, இந்த சட்டவிரோத குடியேற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடி கப்பல் ஆழ்கடலில் புயலில் சிக்கியதும், கடலின் மிகக் கொந்தளிப்பான தன்மை காரணமாக கப்பலின் மேலடுக்கு சேதம் ஏற்பட்டதால், கப்பலுக்குள் கடல் நீர் கசிந்து கப்பல் மூழ்கும் அபாயத்தில் இருந்ததை அவதானிக்க முடிந்தது. ஆழ்கடலில் பல நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இன்றி தவித்த பலர் கடற்படையினரால் மீட்கப்பட்ட போது ஆபத்தான நிலையில் இருந்ததையும் அவதானிக்க முடிந்தது. அதன்படி கடற்படையினரால் மீட்கப்பட்டவர்களுக்கு பராக்கிரமபாஹு கப்பலில் முதலுதவி மற்றும் ஏனைய வசதிகள் வழங்கப்பட்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் அதிகளவு நீர் கசிவு ஏற்பட்டதால், இழுத்துச் செல்ல முடியாததால், அது கைவிடப்பட்டது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 03 மற்றும் 54 வயதுடைய இவர்கள் திருகோணமலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் கல்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மேலும், பணம் சம்பாதிப்பதற்காக பாதுகாப்பற்ற கப்பல்களை பயன்படுத்தி கடத்தல்காரர்களால் நடத்தப்படும் மனித கடத்தலில் சிக்கி, இந்த நாட்டில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற முயற்சிப்பதன் மூலம், தங்கள் உயிரை பணயம் வைத்து சட்டத்தின் முன் தண்டனை பெறுவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறது.