பேருவளை கடற்பரப்பில் விபத்திற்குள்ளான மீன்பிடி படகில் இருந்த 06 மீனவர்களை கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை திணைக்களம் இணைந்து இன்று காலை (2023 மே 14) மேற்கொண்ட விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது, பேருவளை கலங்கரை விளக்கத்தில் இருந்து சுமார் 08 கடல் மைல் (சுமார் 15 கிலோமீற்றர்) தொலைவில், இலங்கையின் மேற்கு கடலில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணத்தினால் ஏற்பட்ட கடல் நீர் கசிவு காரணமாக மூழ்கும் அபாயத்தில் இருந்த மீன்பிடிப்படகொன்றில் இருந்த ஆறு (06) மீனவர்கள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான CG 208 படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதன்படி, கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு பல நாள் மீன்பிடிப் படகின் (IMUL-A-438-CHW) உரிமையாளர் செய்த அறிவித்தலின்படி, கடற்படை உடனடியாகச் செயற்பட்டு இலங்கை கடலோர காவல்படை திணைக்களத்திற்கு சொந்தமான CG 208 படகு, மூழ்கும் அபாயத்தில் இருந்த படகு உள்ள கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் CG 208 படகு மீன்பிடிப்படகு இருந்த கடல் பகுதிக்கு விரைந்து சென்று மூழ்கும் அபாயத்தில் இருந்த படகில் உயிருக்கு ஆபத்தில் இருந்த ஆறு (06) மீனவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளது.

மேலும், இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை திணைக்களம், கடற்படை தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் ஒருங்கிணைந்து, இலங்கையின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்தில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு தொடர்ந்து விழிப்புடன் உள்ளது.