தெற்கு கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

இலங்கைக்கு தெற்கு கடல் பகுதியில், இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றில் நோய்வாய்ப்பட்ட மீனவரொருவரை கரைக்கு கொண்டு வந்து வைத்திய சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல இலங்கை கடற்படையினர் இன்று (2023 ஆகஸ்ட் 21) நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2023 ஆகஸ்ட் 17 ஆம் திகதி குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆறு (06) மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற ‘Sapna 08’ (பதிவு எண் IMUL-A-1004 TLE) என்ற பல நாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலின் போது, அவர்களில் ஒருவர் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் அதிகாரிகள் கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவித்தலுக்கு உடனடியாக பதிலளித்த கடற்படையினர், மீனவரை அழைத்து வருவதற்காக தென் கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடலோர காவல்படையின் சமுத்திரரக்ஷா கப்பலை பலநாள் மீன்பிடி கப்பல் அமைந்துள்ள கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். அதன்படி, இன்று (ஆகஸ்ட் 21, 2023) தென் கடல் பகுதியில் வைத்து ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை சமுத்திரரக்ஷா கப்பலில் ஏற்றிச் சென்ற கடற்படையினர் குறித்த மீனவருக்கு முதலுதவி அளித்து காலி துறைமுகத்துக்கு அழைத்து வந்து மேலதிக சிகிச்சைக்காக காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் பாதிக்கப்பட்டும் கடற்சார் மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.