யாழ்ப்பாண தீவுகள் மற்றும் திருகோணமலை பிரதேச மாணவர்களுக்கிடையிலான நட்பு ரீதியான உதைபந்தாட்ட போட்டி கடற்படை அனுசரணையில்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்பிட்கமைய வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளினால் பிரதேச மாணவர்களின் உதைபந்தாட்ட திறமையை விருத்தி செய்யும் நோக்கில் பல பயிற்சி நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாண தீவுப் பிரதேச மாணவர்களின் 15 வயதின் கீழ் உதைபந்தாட்ட அணியொன்று அண்மையில் திருகோணமலை பிரதேசத்திற்கு விஜயம் செய்து ஒரு நட்பு ரீதியான உதைபந்தாட்ட போட்டியில் கலந்துக் கொண்டது. இப்போட்டி கடந்த 08ம் (அக்டோபர்) திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் மைதானத்தில் நடைபெற்றதுடன் 3-3 எனும் அடிப்படையில் வெற்றி தோல்வி யின்றி முடிவடைந்தது. கிழக்கு பிராந்திய பிரதி கட்டளை தளபதி கொமொடோர் ருவன் பெரேரா அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார். இந்நிகழ்வில் பல உயரதிகாரிகள் உட்பட கடற்படை வீரர்களும் பிள்ளைகளின் பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர்.

இன்று (அக்டோபர் 09) முடிவடைந்த இரண்டு நாள் விஜயத்தின் போது யாழ்ப்பாண மாணவர்கள் சிறந்த ஒரு அனுபவத்தை பெற்றார்கள். அவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கடற்படை அருங்காட்சியகத்தை பார்வையிட்டதோடு படகு சவாரி ஒன்றிலும் கலந்துக் கொண்டனர். மேலும் கோனேஸ்வரம் ஆலயத்திற்கு சென்று வழிபட்டனர். அவர்களின் விஜயத்தின் போது உணவு, தங்குமிட வசதி உட்பட மற்றைய தேவைகள் அனைத்தும் கிழக்கு கட்டளையினால் பெற்றுக் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.