“காலி உரையாடல் 2017” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு ஒக்டோபரில் ஆரம்பம்
 

சமுத்திர மற்றும் கடல்வழி பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆராயும் “காலி உரையாடல் -2017” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு ஒக்டோபர் மாதம் 09 மற்றும் 10ஆம் திகதிகளில் காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. வருடாந்தம் இடம்பெறும் இம்மாநாடு தொடர்ச்சியாக எட்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இம்மாநாட்டில் சுமார் 38 நாடுகள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் இலங்கை கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“காலி உரையாடல்”, சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (செப்டெம்பர்,25) கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இங்கு கருத்து வெளியிட்ட கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னைய்யாஅவர்கள், கோல் டயலொக் ஆனது, தேசிய மற்றும் சர்வதேச பங்காளர்களுக்கு கடல்வழி பாதுகாப்பு தொடர்பாக எழும் பிரச்சினைகள் பற்றி விரிவாக கலந்துரையாடுவதற்கான ஒரு பொதுவான தளத்தை வழங்குவதாக குறிப்பிட்டார்.

முதற் தடவையாக சர்வதேச பாதுகாப்பு தொழில் துறை நிறுவனங்கள் இந்த ஆண்டு மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளன. 'மேம்படுத்தப்பட்ட கடல்சார் பாதுகாப்புக்கான விரிவான பார்வை' எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டு இடம்பெறவுள்ள இம்மாநாடு, 'கடல்சார் பார்வை'யினை மேம்படுத்துவதற்கான வழிமுறையைப் பற்றி கலந்துரையாடுவதற்கான தளத்தினை பங்கேற்பாளர்களுக்கு வழங்கவுள்ளது. 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 100 இலிருந்து 200 வரை அதிகரித்திருப்பதானது சர்வதேச மட்டத்தில் இம்மாநாட்டின் முக்கியத்துவம் அதிகரித்திருப்பதை காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.