தடைப்பட்ட நீரோட்ட வழிகளை சுத்தம்செய்ய கடற்படையினர் உதவி
 

அண்மைய வெள்ளப்பெருக்கின் மூலம் குப்பை கூலங்கள் நிறைந்து நீரோட்டம் தடைப்பட்ட காலி வக்வெல்ல பாலத்தை இலங்கை கடற்படையினர் நேற்று (டிசம்பர், 29) சுத்தம் செய்துள்ளனர். அரச அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோளுக்கிணங்க கடற்படை வீரர்கள் விரைந்து இத்துரித நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். சுத்தம் செய்யப்பட குப்பை கூலங்கள், அண்மையில் பெய்த மழை காரணமாக குறித்தபாலத்தின் நீரோட்டத்திற்கு தடையாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென் மாகாணத்தின் காலி நகரில் அமைந்துள்ள வக்வெல்ல பாலம் ஜின்கங்கை ஆற்றின் ஊடாக அமைக்கப்பட்டுள்ளது. சுழியோடி பிரிவு, விஷேட படகு படைப்பிரிவு மற்றும் துரித நடவடிக்கை படகு படைப்பிரிவு ஆகியவற்றின் கடற்படை வீரர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக அப்பகுதிகளின் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படாதவண்ணம் குப்பை கூலங்களை சுத்தம் செய்துள்ளனர்.

இதேவேளை, பாரிய மூங்கில் மரங்களினால் நீரோட்டம் தடைப்பட்டு காணப்பட்ட பொலதுமோதர ஆற்றினை கடற்படை வீரர்கள் சுத்தம் செய்துள்ளனர். ஆற்றுக்கு அருகாமையில் வளர்ந்து காணப்பட்ட சுமார் 200 மூங்கில் மரங்கள் முறிந்து வீழ்ந்து காலி இமாதுவ அடரா வெல்லன வீதி ஊடான நீரோட்டம் தடைப்பட்டுள்ளது. மேலும், முதலைகள் நிறைந்து காணப்படும் இவ் ஆற்றில் கடற்படை வீரர்கள் பல நாட்கள் மேற்கொண்ட கடும் முயற்சியின் மூலம் இத்தடைகளை நீக்கியுள்ளனர்.