கடற்படையின் புதிய ஆழ்கடல் ரோந்துக்கப்பல் கொழும்பு வருகை
 

இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை கடற்படையின் உயர்ரக ஆழ்கடல் ரோந்துக்கப்பல் இன்று (மார்ச், 26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் இலங்கை கடற்படைக்காக வரையறுக்கப்பட்ட கோவை கப்பல்தளத்தினால் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தியாவிலிருந்து தனது கன்னி விஜயத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த இக்கப்பல் கடற்படை மரபுகளுக்கு அமைய மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டுள்ளது. இங்கு வருகை தந்த இக்கப்பலை கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் சிரிமேவன் ரணசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர்.

அண்மையில் (மார்ச், 23) இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வின்போது இலங்கை கடற்படையினருக்கு இக்கப்பல் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதுடன், எதிவரும் தினங்களில் ஜனாதிபதியிடமிருந்து குறித்த கப்பல் அதற்கான ஆணை அதிகாரத்தினை பெற்றுக்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

இக்கப்பலை வரவேற்கும் நிகழ்வில், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.