வெள்ள நிவாரண நடவடிக்கைககளில் கடற்படையினர்
 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கென 07 டிங்கியிழைப் படகுகள் மற்றும் 02 துரித மீட்பு படகுகள் அடங்கலாக 10 மீட்பு பணிக்குழுக்கள் இலங்கை கடற்படையினால் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவு ,துரித துலங்கள் மீட்பு மற்றும் விடுவிப்பு படைப்பிரிவு (4RS), விஷேட படகு படைப்பிரிவு மற்றும் கடற்படை சுழியோடிகள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த படைவீரர்கள் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்பிரகாரம், காலி மாவட்டத்தின் நெலுவ, தவலம, இமதுவ, ஹினுந்தும ஆகிய பிரதேசங்களில் நான்கு குழுக்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, வலல்லாவி மற்றும் புளத்சிங்கள மற்றும் கொழும்பு மாவட்டத்தின் வத்தளை ஆகிய பிரதேசங்களில் ஆறு குழுக்களும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளையும் இலங்கை கடற்படை வழங்கி வருகின்றது.

இதேவேளை, கடற்படை வீரர்கள் அடங்கிய ஒரு குழு, வெள்ள நீரினால் குவிக்கப்பட்ட குப்பைகூளங்கள் காரணமாக அடைபட்ட பத்தேகம, அகலிய பாலத்தின் தடையை நீக்கி, வெள்ள நீர் வழிந்தோடுவதனை உறுதி செய்தனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புள்ளிவிபரங்களின்படி ஒன்பது இறப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள அதேவேளை, ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் பத்தொன்பது பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாவும் குறிப்பிடப்படுகின்றது.மேலும், 48,900 பேர் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5,800 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல குளங்களின் நீர் மட்டம் அதிகரிப்பதனால் அவற்றின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன.

நாட்டின் பல மாவட்டங்களில் கன மழை கிடைக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் இதன்போது அடிக்கடி மின்னல் தாக்கம் நிகழும் வாய்ப்புள்ளதாகவும் எனவே அவற்றிலிருந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைக்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.