அவுஸ்ரேலிய கடற்படையின் இரு கப்பல்கள் (02) திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை

அவுஸ்ரேலிய கடற்படையின் இரண்டு கப்பல்கள் இன்று (மார்ச் 17) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது, மட்டக்களப்புக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மூழ்கிய கப்பல் தொடர்பான ஆரம்பகட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இவ்விரு அவுஸ்ரேலிய கடற்படை கப்பல்களும் வருகை தந்துள்ளது. திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த டயமன்டீனா மற்றும் லீவுன் கப்பல்களை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளனர்.

கப்பல்கள் துறைமுகத்தை வந்தடைந்துள்ள பின் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளாகிய கொமான்டர் ஆர்.பி மோடிமர் மற்றும் லெஃப்டினென்ட் கமாண்டர் டி மெக்டிவிடி ஆகியோர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவை சந்தித்தனர். இச் சந்தர்ப்பத்தை குறித்து நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

‘டயமன்டினா’ கப்பல் 52.5 மீட்டர் நீளம் மற்றும் 9.9 மீட்டர் அகலத்தைக் கொண்டுள்ளதுடன், 6 அதிகாரிகளுடன் 40 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது மேலும் லிவுன் கப்பல் 71.2 மீட்டர் நீளம் மற்றும் 15.2 மீட்டர் அகலத்தைக் கொண்டுள்ளதுடன், 10 அதிகாரிகளுடன் 61 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது

இவ்விரு கப்பல்களின் சிப்பாய்கள் இலங்கையில் தரித்திருக்கும் வேளையில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்ள உள்ளதுடன், குறித்த இக்கப்பல்கள் இம்மாதம் (மார்ச்) 20ஆம் திகதி நாட்டை விட்டு செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது.