மூத்த கடற்படை அதிகாரிகள் 12 பேருக்கு விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கப்பட்டன

இராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படைகளின் நிரந்தர படையணிகளின் சிரேஷ்ட அதிகாரிகளினால் நிறைவேற்றப்படும் விசேட சேவைகளைப் பாராட்டும் முகமாக வழங்கப்படும் விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் (சிறப்பான சேவைக்கான பதக்கம்) வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

சிறப்பான சேவைக்கான பதக்கமானது விசேட விருதாக கருதப்படுவதுடன், லெப்டினன் கேர்ணல் மற்றும் அதனிலும் உயர்ந்த பதவிகளை வகிக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் கப்பல் மற்றும் விமானப் படைகளில் அதற்கு சமனான பதவிகளை வகிக்கும் 25 வருட கால தொடர்ச்சியான சேவைக் காலத்தையும் சிறப்பான சேவைப் பின்னணியையும் கொண்டவர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதன் பிரகாரமாக கடற்படையின் பணியாற்றும் ரியர் அட்மிரல் என்.பி.எஸ் ஆடிகல, ரியர் அட்மிரல் ஜி.எஸ்.ஆர் ஜயவர்தன, ரியர் அட்மிரல் எஸ்.எம்.டி.கே சமரவீர, ரியர் அட்மிரல் பீ.எம் விக்ரமசிங்க, ரியர் அட்மிரல் எஸ்.ஏ வீரசிங்க, ரியர் அட்மிரல் எச்.ஏ.யு.டி ஹெட்டியாரச்சி, ரியர் அட்மிரல் எம்.எம்.எச் கமகே ஆகிய மூத்த அதிகாரிகள் மற்றும் கடற்படை சேவையில் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் (ஓய்வு) எச்.டீ.ஆர்.என் பிரேமசிரி, ரியர் அட்மிரல் (ஓய்வு) ஈ.டப் ஜயசிங்க, ரியர் அட்மிரல் (ஓய்வு) ஏ.ஏ.பி லியநகே, ரியர் அட்மிரல் (ஓய்வு) பீ.ஆர்.பி திஸாநாயக்க, ரியர் அட்மிரல் (ஓய்வு) யு.ஏ.பி ஏக்கநாயக்க ஆகிய மூத்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.

இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் நாயகம் சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி உள்ளிட்ட முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.