கடற்படையினரால் ஆழ்கடலில் கைப்பற்றப்பட்ட ஏராளமான போதைப்பொருள் மற்றும் மீன்பிடி படகு திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது

இலங்கை கடற்படை தனது ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலொன்று பயன்படுத்தி இலங்கையில் இருந்து சுமார் 463 கடல் மைல் (சுமார் 835 கி.மீ) தொலைவில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நடவடிக்கையின் பின்னர் கைப்பற்றிய சட்டவிரோத போதைப்பொருள், சந்தேக நபர்கள் மற்றும் படகு இன்று (2020 ஏப்ரல் 01) திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சயுர 2020 மார்ச் 28 சனிக்கிழமையன்று காலை 9.30 மணியளவில் தீவின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 463 கடல் மைல் (835 கி.மீ) தூர கடலில் போதைப்பொருளைக் கொண்டு சென்று கொண்டிருந்த ஒரு கப்பலைக் கைப்பற்றியது. மாநிலக் கொடி (Flag state) இல்லாத இந்த வெளிநாட்டு கப்பலை சர்வதேச கடலில் கண்டறிந்த பின்னர் குறித்த கப்பல் கடற்படையினரால் சோதனை செய்யப்ட்டதுடன் அங்கிருந்து ஐஸ் (Methamphetamine) போதைப்பொருள் 605 கிலோ கிராம் மற்றும் இதற்கு முன்னர் இலங்கையில் கண்டுபிடிக்கப்படாத கெடமைன் (ketamine) போதைப்பொருள் 579 கிலோ கிராம் கண்டுபிடிக்கபட்டது. மேலும் கப்பலில் 200 பாக்கெட் பாபுல் போதைமருந்து மற்றும் அடையாளம் காணப்படாத 100 கிராம் போதைமாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இங்கு ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளின் மதிப்பு மட்டும் ரூ 605 கோடி என்று கணக்கிடப்படப்பட்டுள்ளது. மேலும் கப்பலில் இருந்த ஒன்பது பாகிஸ்தான் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதுடன் இன்றுவரை கடலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மிகப்பெரிய என்னிக்கை இதுவாகும்.

இந்த ஆண்டில் கடந்த மூன்று மாதங்களுக்குள் சர்வதேச கடலில் கைது செய்யப்பட்ட மூன்றாவது வெளிநாட்டு கப்பல் இதுவாகும். இந்த சம்பவத்திற்கு முன்னர், பிப்ரவரி 22 மற்றும் 25 திகதிகளில் போதைப்பொருள் கொண்டு வந்த இரண்டு வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் அவைகளில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடிக் கப்பலொன்று கைது செய்யபட்டதுடன் 16 வெளிநாட்டினர், 05 இலங்கையர்கள் மற்றும் கடலில் போதைப்பொருள் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள 06 இலங்கையர்கள் தீவின் தெற்கு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். மேலும் 2019 ஆண்டில் 3653 கிலோ கிராம் கேரள கஞ்சா, 762 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 03 கிலோகிராம் ஐஸ் (Methamphetamine) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த அண்டில் இதுவரை மூன்று மாதங்களில் 2339 கிலோ கிராம் கேரள கஞ்சா, 739 கிலோகிராம் ஐஸ், 438 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 579 கிலோகிராம் கெடமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன்படி, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள். சந்தேக நபர்கள் மற்றும் படகு இன்று (2020 ஏப்ரல் 01) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா உட்பட போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளதுடன் இந்த நிகழ்வு கண்காணிக்க பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்னவும் கலந்து கொண்டார். இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட 9 பாகிஸ்தான் சந்தேக நபர்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தால் மேற்கொள்ளப்படும். இலங்கை கடற்படை செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவ்வாரு தொடர்ந்து சர்வதேச கடலில் போதைப்பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பற்றி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. மேலும், போதைப்பொருள் விநியோகச் சங்கிலியில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பங்காளர்களைப் பின்தொடர்வதற்காக இலங்கை கடற்படை பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைந்து பணியாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் உரையாற்றிய கடற்படைத் தளபதி, மீன்வள சமூகம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இரையாகாமல், தங்கள் வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.