சர்வதேச பயணிகள் கப்பலான MSC Magnifica கப்பலில் இருந்த ஒரு ஜெர்மன் பெண் கரைக்கு அழத்து வர கடற்படை உதவி

சர்வதேச பயணிகள் கப்பலான MSC Magnifica கப்பலில் பணியாற்றிய ஒரு இலங்கையர் தன்னை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருமாறு சமூக ஊடகங்கள் மூலம் கோரியிருந்தார், அதன்படி அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஒப்புதலின் கீழ் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ் கடற்படை இன்று (ஏப்ரல் 06, 2020) குறித்த இலங்கையரை பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், இந்த பயணக் கப்பலில் இதய நோயாளியாக இருந்த ரோஸ்மேரி மார்கிரெட் என்ற 75 வயதான ஜெர்மன் பெண்ணையும் கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படை உதவியது. சர்வதேச கடல் சட்டத்தின்படி, இலங்கை தேடல் மற்றும் மீட்பு பிராந்தியத்திற்குள் (SARR) விபத்து அல்லது அவசரநிலை ஏற்படுகின்ற கப்பல்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு இலங்கை கடற்படைக்கு உள்ளது. ஆனால் உலகளவில் தற்போதைய சுகாதார நிலைமையில் கூட பொறுப்புக்கூறலுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா நோய்வாய்ப்பட்ட பெண்ணை தரைக்கு கொண்டு வருவதில் நேரடியாக ஈடுபட்டார். COVID-19 ஐத் தடுப்பதற்கான ஜனாதிபதி பணிக்குழுவின் உத்தரவின் பேரில் அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்றி இந்த பெண் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.