வெற்றிகரமான கூட்டு கடற்படைப் பயிற்சிக்குப் பிறகு ‘INS Sukanya’ கப்பல் இலங்கை விட்டுச் சென்றது

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 பிப்ரவரி 27 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Sukanya’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்து, இன்று (2023 மார்ச் 01) இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவுடன் நடைபெற்ற கூட்டு கடற்படை பயிற்சிக்குப் பிறகு தீவை விட்டுச் செல்கிறது. மேலும் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பலுக்கு வழக்கமான பிரியாவிடை வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டு கடற்படைப் பயிற்சியில் (PASSEX), கப்பல்களுக்கு இடையே கடலில் பொருட்கள் மற்றும் எரிபொருளைப் பரிமாற்றம் செய்வதற்கு கப்பல்களைத் தயாரித்தல், அமைப்புகளில் நகர்த்துதல், கப்பல்களுக்கு இடையே செய்திகளைப் பரிமாறிக்கொள்வது போன்ற கடற்படைப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

‘INS Sukanya’ இலங்கையில் தங்கியிருந்த காலத்தில், இலங்கை கடற்படை வீரர்களுக்கு கப்பலில் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தியதுடன் ‘INS Sukanya’ கப்பலின் மாலுமிகள் புத்தளம், கங்கேவாடிய பகுதியில் உள்ள கடற்படை விரைவு நடவடிக்கை படகுகள் படைத் தலைமையகத்தில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) பற்றிய பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும், இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் யோகா பயிற்சி நிகழ்ச்சியொன்று காலி முகத்திடலில் நடைபெற்றதுடன், இலங்கை கடற்படை ஏற்பாடு செய்திருந்த கொழும்பு மற்றும் காலி பகுதிகளில் முக்கிய இடங்களுக்கான சுற்றுப்பயணத்துக்கு ‘INS Sukanya’ வின் கடற்படையினர் கலந்து கொண்டனர்.

அத்துடன், காலி தியகிதுல்கந்த கனிஷ்ட கல்லூரி மற்றும் மொனராகலை கித்சிரிகம கனிஷ்ட கல்லூரியைச் சேர்ந்த சிறுவர்களுக்கு கப்பலை பார்வையிடுவதற்கும் வாய்ப்பு கிடைத்ததுடன் ‘INS Sukanya’ கப்பலில் கொண்டு வரப்பட்ட பாடசாலை உபகரணங்களை குறித்த பாடசாலைகளுக்கு வழங்குவதற்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் கெளரவ தலைவி திருமதி மாலா லமாஹேவாவிடம் அடையாள கையளிப்பும் செய்யப்பட்டது.

பிராந்திய கடற்படைகளுக்கு சொந்தமான கப்பல்களின் இத்தகைய வருகைகள் இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும், மேலும் புதிய அறிவு திறன்கள் மற்றும் அனுபவங்கள் கூட்டாக நடத்தப்படும் கடற்படை பயிற்சிகள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும். எதிர்காலத்தில் கடல் பிராந்தியத்தில் பாரம்பரிய கடல் அச்சுறுத்தல்கள் பொதுவான கடல்சார் சவால்களை கூட்டாக தடுக்க பெரும் உதவியாக இருக்கும்.