சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் இன்று (2022 மே 31) காலை சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளுக்கு 06 கடற்படை நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளனர்.

அதன்படி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்ன அவர்களின் பணிப்புரையின் பேரில் மேற்கு கடற்படை கட்டளையின் நான்கு நிவாரண குழுக்களை இரத்தினபுரி பகுதிக்கு அனுப்பியதுடன் தெற்கு கடற்படை கட்டளை இரண்டு நிவாரண குழுக்களை காலி தவலம பகுதிக்கு வெள்ள நிவாரணம் வழங்குவதற்காக அனுப்பி வைத்தது. மேலும், இரத்தினபுரி, கலவான பொதுப்பிட்டிய வீதியில் தெல்கொட பாலத்தை அண்மித்த பகுதியில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படையின் நிவாரணக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மேற்கு கடற்படை கட்டளையிலிருந்து 03 மேலதிக நிவாரண குழுக்களும், தென் கடற்படை கட்டளையிலிருந்து 08 மேலதிக நிவாரண குழுக்களும், வடமேற்கு கடற்படை கட்டளையிலிருந்து 18 நிவாரண குழுக்களும் பாதகமான வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஈடுபடுத்தப்படவுள்ளனர்.