சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 47 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை மற்றும் வென்னப்புவை பொலிஸாரால் 2022 ஜூலை 31 ஆம் திகதி இரவு வென்னப்புவ நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது வென்னப்புவையிருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டிற்கு சட்டவிரோத குடியகல்வு முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 47 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கு கடற்படை கட்டளை மற்றும் வென்னப்புவ பொலிசார் இணைந்து 2022 ஜூலை 31 ஆம் திகதி இரவு வென்னப்புவ நகரில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்திற்கிடமான 03 வேன்களை அவதானித்து சோதனையிட்டனர். அங்கு சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 37 பேர், 06 பெண்கள், 18 வயதுக்குட்பட்ட 04 பேர் உட்பட 47 பேருடன் அந்த வேன்களில் 03 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, புத்தளம், சிலாபம், மாரவில, மஹாவெவ, முந்தலம மற்றும் வெள்ளவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் குறித்த சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வென்னப்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், பணம் சம்பாதிப்பதற்காக கடத்தல்காரர்களால் நடத்தப்படும் மனித கடத்தலில் சிக்கி, இந்த நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிப்பதன் மூலம், தங்கள் உயிரை பணயம் வைத்து சட்டத்தின் முன் தண்டனை பெறுவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறது.