இலங்கை கடற்படையின் 48 வெள்ள நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில்

‍‍‍திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்காக 48 கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் இன்று காலை (2022 ஆகஸ்ட் 02) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அவசரகால சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் நிவாரண குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன் படி,மேற்கு கடற்படை கட்டளையின் 27 குழுக்களும், தெற்கு கடற்படை கட்டளையின் 08 குழுக்களும், வட மேற்கு கடற்படை கட்டளையின் 13 குழுக்களும் இவ்வாரு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேற்கு கடற்படை கட்டளை மூலம் கடற்படையின் இரண்டு வெள்ள நிவாரண குழுக்களை இரத்தினபுரி புதிய நகரில் நிலைநிறுத்தியுள்ளதுடன், மேலதிக குழுவொன்றை இரத்தினபுரி முவகம பகுதிக்கு நேற்று மாலை (ஆகஸ்ட் 1) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தயார் நிலையிலுள்ள கடற்படை குழுக்கள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் ஒருங்கிணைப்பில் செயல்படும்.