கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

திருகோணமலை ஃபவுல் துடுவயிலிருந்து சுமார் 65 கடல் மைல் (சுமார் 120 கி.மீ) தொலைவில் கிழக்கு கடற்பரப்பில் நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை உள்ளுர் பல நாள் மீன்பிடி படகொன்றில் இருந்து இன்று (2022 செப்டம்பர் 23) அதிகாலை கடற்படையினரால் மீட்டப்பட்டார்.

2022 ஆகஸ்ட் 07 ஆம் திகதி நில்வெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக ஆறு (06) மீனவர்களுடன் புறப்பட்ட 'தினுதிய' (பதிவு எண். IMUL-A-1318 MTR) என்ற பல நாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவர் பருத்தித்துறை கடற்பகுதியில் திடீரென சுகவீனமடைந்தாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு உடனடியாக பதிலளித்த கடற்படையினர், நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்காக கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட இலங்கை கடற்படை போர்க்கப்பலான ரணவிக்ரமவை குறித்த கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். அதன்படி, தற்போதுள்ள கடல் சீற்றத்தை எதிர்கொண்டு பெரும் முயற்சியுடன் 2022 செப்டம்பர் 22 ஆம் திகதி இரவு நோய்வாய்ப்பட்ட மீனவரை திருகோணமலை ஃபவுல் துடுவயிலிருந்து சுமார் 65 கடல் மைல் (சுமார் 120 கி.மீ) தொலைவில் கிழக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பல் ரணவிக்கிரம மூலம் மீட்கப்பட்டு மீனவருக்கு முதலுதவி அளித்து உடனடியாக திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக இன்று (செப்டம்பர் 23, 2022) திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் பாதிக்கப்பட்டும் கடற்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.