சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் ஒருதொகை கல்பிட்டி கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

கல்பிட்டி பாரமுனை கடற்பரப்பில் 2022 ஒக்டோபர் 07 ஆம் திகதி காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடலில் மிதந்து கொண்டிருந்த 427 கிலோவுக்கும் அதிகமான (ஈரமான) பீடி இலைகள் கைப்பற்றப்பட்டது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிருவனத்துடன் இணைக்கப்பட்ட மரைன் படைப்பிரிவின் குழுவினர் 2022 ஒக்டோபர் 07 ஆம் திகதி காலை P 228 என்ற கரையோர ரோந்துக் கப்பலின் மூலம் கல்பிட்டி, பாரமுனை கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர். அப்போது குறித்த கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான 10 பொதிகள் சோதனை செய்தபோது சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 427 கிலோ 800 கிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கைப்பற்றப்பட்டது.

கடற்படை நடவடிக்கை காரணமாக இந்த பீடி இலைகளை கடத்தல்காரர்கள் கரைக்கு கொண்டு வர முடியாமல் கடலில் விட்டுச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது, மேலும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், 2022 ஆம் ஆண்டில் இதுவரை 34 நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த சுமார் 7585 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன், 09 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.