சுமார் 2800 மில்லியன் ரூபா பெறுமதியான 121 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஹஷிஸ் போதைப்பொருளுடன் 06 சந்தேகநபர்கள் தென் கடலில் வைத்து கடற்படையினரால் கைது

அரச புலனாய்வுப் பிரிவினரும் இலங்கைக் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட புலனாய்வு நடவடிக்கையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இலங்கைக்கு தெற்கு தெவுந்தர பகுதியில் இருந்து சுமார் 413 கடல் மைல் (சுமார் 764 கி.மீ) தொலைவில் ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் சுமார் 111 கிலோ 606 கிராம் (பொதி எடையுடன்) ஹெரோயின் மற்றும் 10 கிலோ 254 கிராம் ஹஷிஸ் (பொதி எடையுடன்) போதைப்பொருளுடன் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று மற்றும் ஆறு சந்தேக நபர்கள் 2023 மே 13 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகு மூலம் கைது செய்யப்பட்டது. குறித்த போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (2023 மே 18) காலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (மே 18) காலை கொழும்பு துறைமுகத்திற்கு சென்று கைப்பற்றப்பட்ட போதைபொருட்களை நேரில் பார்வையிட்டார்.

இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவினரும், அரச புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து நடத்திய விசேட கூட்டுப் புலனாய்வு நடவடிக்கையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படைக் கப்பல் விஜயபாகு என்ற ஆழ்கடல் கண்கானிப்பு கப்பலை இலங்கைக்கு தெற்கு தெவுந்தர பகுதிக்கு அனுப்பி 413 கடல் மைல் (764 கி.மீ.) ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையின் போது, குறித்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற பல நாள் மீன்பிடிக்கப்பலொன்று கண்காணித்து ஆய்வு செய்யப்பட்டதுடன் அங்கு, மிகவும் கவனமாக மறைத்து வைக்கப்பட்ட தொண்ணூற்றொன்பது (99) பார்சல்களில் பொதி செய்யப்பட்ட 111 கிலோ 606 கிராம் ஹெராயின் மற்றும் ஒன்பது (09) பார்சல்களில் அடைக்கப்பட்ட ஹஷிஸ் போதைப்பொருள் சுமார் 10 கிலோ 254 கிராம் கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த பலநாள் மீன்பிடிக் கப்பல் மற்றும் அங்கு இருந்த ஆறு (06) உள்ளூர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் மற்றும் ஹஷிஸ் போதைப்பொருளின் மதிப்பிடப்பட்ட பெறுமதி சுமார் 2800 மில்லியன் ரூபா என நம்பப்படுகிறது.

மேலும் இந்த நடவடிக்கைக்கு இணையாக இலங்கை கடற்படை, அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நில வலையமைப்பின் சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீர்கொழும்பு, இரணைவில, ஆடிகம மற்றும் மினுவங்கொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 29 வயதுக்கும் 58 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள், பலநாள் மீன்பிடிக் கப்பல் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் தொகை ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிக்கும் தேசிய அபிலாஷையை அடைவதற்காக, கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனையின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் (ஓய்வுபெற்ற) தலையீட்டுடன், போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிக்கும் தேசிய நோக்கத்தை அடைவதற்காக, ஒரு பொதுவான இலக்கை நோக்கி. அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து வழிநடத்துவதன் மூலம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதல் காரணத்தினால் கடற்படையால் இத்தகைய வெற்றிகரமான போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையுடன், 2023 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 7603 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வீதி பெறுமதியான போதைப்பொருளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மீன்பிடி நடவடிக்கை என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மேற்கொள்ளும்.