15 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம், தொண்டமனாறு பகுதியில் இன்று (2022 ஆகஸ்ட் 29) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 51 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற வான் ஒன்று சந்தேகநபர்கள் இருவருடன் (02) கைது செய்யப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடற்படை பல கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தின் கடற்படையினரால் யாழ்ப்பாணம் தொண்டமனாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையில், சந்தேகத்திற்கிடமான வகையில் அவ்வழியாகச் சென்ற வேன் ஒன்று தொண்டமானாறு பாலத்திற்கு அருகில் சோதனையிடப்பட்டது. அங்கு, வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு (02) சாக்குகளில் பொதி செய்யப்பட்ட 51 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களும் (02) குறித்த வேனும் கைது செய்யப்பட்டது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. சந்தேகநபர்கள், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் வேன் என்பன அச்சுவேலி பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.