EVENT NEWS 2026

டெங்கு நோயற்ற கொழும்பை உருவாக்குவதற்கான தேசிய பணித்திட்டத்திற்கு இலங்கை கடற்படையின் பங்களிப்பு

12 Jul 2026

மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன், 'டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி' (Towards a Dengue-Free Colombo) எனும் கருப்பொருளின் கீழ் 'கிளீன் ஸ்ரீ லங்கா' (Clean Sri Lanka) செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு என்பன இணைந்து நடைமுறைப்படுத்தும் தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு இலங்கை கடற்படை தனது முழுமையான மற்றும் தீவிர பங்களிப்பை வழங்கிவருகிறது. கொடிய டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு மிகவும் பாதுகாப்பானதொரு சுகாதார சூழலை உருவாக்கும் நோக்கில், இத்திட்டம் 2026 ஜூலை 11 ஆம் திகதி எட்டாவது நாளாகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார மருத்துவ அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோருடன் இணைந்து, மேற்கு கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான அறுபத்திரண்டு (62) கடற்படை வீரர்கள் இந்த தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்காகத் தங்களது பங்களிப்பை வழங்கினர். இதற்கமைய மோதரை, பொரளை, கோட்டை , புறகோட்டை, பாணந்துறை, தலவத்துகொட மற்றும் மஹர ஆகிய பகுதிகளில் ஐம்பத்தைந்து (55) இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அங்கு டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய ஆயிரத்து ஐந்நூற்று எட்டு (1,508) இடங்கள் அடையாளங் காணப்பட்டன. மேலும், இந்த பரந்த டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த நாற்பத்தெட்டு (48) விழிப்புணர்வு திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

மேலும், இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களின் ஊடாக சுற்றுச்சூழல் முறையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றைச் சுத்திகரிக்கும் மற்றும் அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு இணையாக, இலங்கை கடற்படையின் ஏனைய கட்டளைகளின் மூலமும், கடற்படை முகாம்களை டெங்கு நுளம்புகள் அற்ற பாதுகாப்பான வலயங்களாக மாற்றுவதற்காக தொடர்ச்சியான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மேலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Accessibility Tools