வெற்றிகரமாக பயிற்சியை முடித்த 34 இடைநிலை அதிகாரிகள் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் அதிகாரமளிக்கப்பட்டனர்
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 39 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 09 தொழில்நுட்ப பிரிவு இடைநிலை அதிகாரிகள் மற்றும் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியில் பயிற்சியை நிறைவு செய்த 66 ஆவது மாணவ சிப்பாய் ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 25 இடைநிலை அதிகாரிகள் ஆகியோரை அதிகாரப்படுத்தும் விழா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் 2026 ஜூலை 11 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியில் மிக விமரிசையாக நடைபெற்றது.
அதன்படி, இந்த வெளியேறிச் செல்லும் அணிவகுப்பின் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை, கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் தளபதி கொமடோர் தினேஷ் பண்டாரஅணிவகுப்பு மைதானத்திற்கு அருகில் வரவேற்றதுடன் அதனைத் தொடர்ந்து, பிரதான மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கடற்படைத் தளபதிக்கு இராணுவ மரியாதை செலுத்தப்பட்டதன் பின்னர், அவர் வெளியேற்ற அணிவகுப்பை பார்வையிட்டார். அதன் பின்னர், பயிற்சி காலத்தில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய இடைநிலை அதிகாரிகளுக்கு விருதுகளையும், வெளியேறும் அதிகாரிகளுக்கு வாள்களையும் கடற்படைத் தளபதி வழங்கினார்.
இதற்கமைய, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பிரிவின் 39 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த சிறந்த தொழில்நுட்ப இடைநிலை அதிகாரிக்கான விருதை ஆர்ஏஆர்சி ரணசிங்கவும், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் பயிற்சியை நிறைவு செய்த 66 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த சிறந்த இடைநிலை அதிகாரிக்கான கௌரவ வாளை இடைநிலை அதிகாரி எச்எம்கேஎம் பண்டாரவும் பெற்றுக்கொண்டதுடன், தொழில்முறை பாடங்களில் அதிக புள்ளிகளைப் பெற்ற இடைநிலை அதிகாரிக்கான விருதை இடைநிலை அதிகாரி டிஎன்டிஜி நாணயக்காரவும், சிறந்த குறிசூட்டாளருக்கான விருதை இடைநிலை அதிகாரி டபிள்யூகேடி விஜேசிங்கவும், சிறந்த வீரருக்கான விருதை இடைநிலை அதிகாரி ஏவிஓ அத்துகோரலவும் இங்கு கடற்படை தளபதியிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
பின்னர் உரையாற்றிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இன்றைய நாள் இந்த அதிகாரிகளின் பயிற்சி வாழ்க்கையின் வெற்றிகரமான முடிவையும், கடற்படை அதிகாரிகளாக பொறுப்புமிக்கதொரு புதிய தொழில்முறை பயணத்தின் தொடக்கத்தையும் குறிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும் எனக் குறிப்பிட்டார். மேலும், அதிகாரமளிக்கப்படும் இந்த அதிகாரிகள் இலங்கை கடற்படையின் உன்னத பாரம்பரியங்கள் மற்றும் கொள்கைகளைப் பாதுகாத்து, ஒழுக்கம், தொழில்முறைத் திறன் மற்றும் நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் கடமையாற்ற வேண்டும் என்றும், தங்களின் கீழ் பணிபுரியும் கடற்படையினருக்கு முன்மாதிரியான தலைவர்களாகச் செயல்படுவது அவர்களின் முதன்மைப் பொறுப்பாகும் என்றும் கடற்படைத் தளபதி வலியுறுத்தினார்.
அத்துடன், அதிகாரமளிக்கப்படும் இந்த அதிகாரிகளின் வெற்றிக்கு பின்னால் இருந்த பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்கள், கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் தளபதி உள்ளிட்ட ஆலோசகர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த கடற்படைத் தளபதி, புதிய அதிகாரிகளின் தொழில்முறை வாழ்க்கை முழுவதும் தேவையான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் தொடர்ச்சியாக வழங்குமாறு அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கடற்படையினரிடமும் கேட்டுக்கொண்டார்.
இதன்போது, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அவர்களின், "ஒரு தேசத்தின் பலம் அதன் இளைஞர்களிடம் உள்ளது. இளைஞர்களின் பலம் அவர்களின் கல்வியில் உள்ளது" என்ற கூற்றை நினைவு கூர்ந்த கடற்படைத் தளபதி, கல்வி மற்றும் நற்பண்புகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் தலைமையே நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான முக்கிய அடித்தளமாகும் என்பதை இங்கு வலியுறுத்தினார்.
இறுதியாக, அதிகாரம்பெறும் புதிய அதிகாரிகளின் சாதனைகள் குறித்து இலங்கை கடற்படை பெருமிதம் கொள்கிறது எனக் குறிப்பிட்ட கடற்படைத் தளபதி, கௌரவம், சிறந்து விளங்குதல் மற்றும் தளராத அர்ப்பணிப்புடன் தாய்நாட்டிற்கு சேவை செய்து, கடற்படையின் பெருமைமிக்க பாரம்பரியங்களையும் விழுமியங்களையும் பாதுகாக்கும் அதிகாரிகளாக மாறுமாறு புதிய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்ததுடன், அவர்களின் எதிர்கால தொழில்முறை வாழ்க்கைக்கு தனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
அதன் பின்னர், பயிற்சி பெறும் கடற்படையினரின் அணிவகுப்பு சாகசக் காட்சியுடனும், கடற்படை வாத்தியக் குழுவின் வர்ணமயமான இசை நிகழ்ச்சியுடனும், கடற்படை பாரம்பரியத்தின்படி நடத்தப்பட்ட சூரிய அஸ்தமனச் சடங்குடன் அதிகாரமளிக்கும் விழா நிறைவுற்றது.
இந்த அதிகாரமளிப்பு விழாவில் மகா சங்கத்தினர், ஏனைய மத குருமார்கள், கடற்படைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, துணைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே உள்ளிட்ட கடற்படை மேலாண்மை வாரியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய உள்ளிட்ட கட்டளைத் தளபதிகள், கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் தளபதி கொமடோர் தினேஷ் பண்டார உள்ளிட்ட கொடி அதிகாரிகள், கடற்படைத் தலைமையகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள், முக்கிய விருந்தினர்கள் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளின் பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.













