Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளால் பயன்படுத்தப்படும் நிலங்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் பார்வையிட்டார்

28 May 2026

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இலங்கை கடற்படையின் வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளினால் பயன்படுத்தப்பட்டு வரும் நிலங்களை பார்வையிடும் நோக்கில் 25 மே 2025 மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தில், மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கௌரவ உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

விஜயத்தின் போது, நாட்டை பாதித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நடவடிக்கைகளில் மன்னார் மாவட்டத்தில் இலங்கை கடற்படை வழங்கி வரும் செயற்பாட்டு பங்களிப்பை பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரடியாக அவதானித்தார். மேலும், கடல்சார் மற்றும் கரையோர பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் அவர்களின் பொறுப்புப் பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் அவர் மீளாய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கடற்படைப் பிராந்திய கட்டளைத் தளபதிகளிடமிருந்து தற்போதைய செயற்பாடுகள் தொடர்பான விரிவான விளக்கங்களைப் பெற்றுக்கொண்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர், அவர்கள் மேற்கொண்டு வரும் சிறந்த பணிகளைப் பாராட்டினார். மேலும், அவற்றின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

பின்னர், மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம், சிலாவத்துறை, தலைமன்னார், வங்காலப்படு மற்றும் பள்ளிமுனை ஆகிய பகுதிகளில் கடற்படையினரால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலங்களை அவர் பார்வையிட்டார். அத்துடன், உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடி, வீடமைப்பு, சமூக ரீதியான சவால்கள், நலன்புரி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மீனவ சமூகத்தினர் எதிர்நோக்கும் தடைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தினார்.

இவ்விடயங்களுக்கு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுடன் இணைந்து தீர்வுகளை காணும் வழிமுறைகள் குறித்தும் அவர் ஆராய்ந்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், கடற்படைத் தளபதி, மன்னார் ஆயர் இல்லத்தின் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர், வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படைப் பிராந்திய தளபதிகள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் உட்பட நில அளவைத்துறை மற்றும் வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

ஊடக ஆதரவு - https://www.defence.lk/

Accessibility Tools