EVENT NEWS › 2026

திருகோணமலை கடற்படைத் தளத்தின் 3வது துரித தாக்குதல் ரோந்து படகு பராமரிப்புப் பட்டறையில் நிறுவப்பட்ட L 12V 180 கலப்பின இயந்திரத்தின் மாதிரி திறக்கப்பட்டது

08 Oct 2026

இலங்கை கடற்படைப் வீரர்களின் தொழில்நுட்ப அறிவு மற்றும் நடைமுறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், திருகோணமலை கடற்படைத் தளத்தின் 3வது துரித தாக்குதல் படகு பட்டறையால் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட L 12V 180 கலப்பின இயந்திர மாதிரி (L 12V 180 Hybrid Engine Simulator), 2026 ஒக்டோபர் 07 ஆம் திகதி கடற்படை பிரதிப் பிரதம அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே அவர்களின் தலைமையில் கடற்படைத் தளத்தின் 3வது துரித தாக்குதல் ரோந்து படகு பராமரிப்புப் பட்டறையில் திறந்து வைக்கப்பட்டது.

கொமடோர் அதிகாரி கடற்படைத் தளத்தின் (கிழக்கு) கொமடோர் பிரியங்கர திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ள இந்த மாதிரி மூலம், வேகத் தாக்குதல் ரோந்து படகுகளின் பிரதான இயந்திரங்களை இயக்குதல், கண்காணித்தல் மற்றும் அடிப்படை கோளாறுகளை கண்டறிதல், அதன் செயல்திறனை கண்காணித்தல், அத்துடன் அசாதாரண நிலைமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட செயல்பாடுகள் தொடர்பில் கடற்படை வீரர்கள் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர்.

மேலும், செயற்பாட்டில் உள்ள வேகத் தாக்குதல் ரோந்து படகில் பொருத்தப்பட்டுள்ள L 12V 180 கலப்பின இயந்திரத்தின் செயற்பாடு தொடர்பான நடைமுறைப் பயிற்சியை தரையிலிருந்தே பெற்றுக்கொள்ள முடிவதன் மூலம், கோட்பாட்டு அறிவுக்கும் நடைமுறை அறிவைப் பயன்படுத்துவதற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, தொழில்நுட்ப அறிவு, கோளாறுகளைத் தீர்க்கும் திறன் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு இது பங்களிக்கும். அத்துடன், L 12V 180 இயந்திரங்களைக் கொண்ட வேகத் தாக்குதல் ரோந்து படகுகளுக்கு கடற்படைப் வீரர்களை நியமிப்பதற்கு முன்னர், தொழில்நுட்ப மற்றும் திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்குவதற்கும் இந்த மாதிரியைப் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட கடற்படை வீரர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools