கடற்படை மரியாதையுடன் ரியர் அட்மிரல் ஜகத் குமார கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
இலங்கை கடற்படையில் 33 ஆண்டுகளுக்கும் மேலான சேவைக்காலத்தை நிறைவு செய்து, ரியர் அட்மிரல் ஜகத் குமார இன்றைய தினம் (2026 செப்டம்பர் 02) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையிலான கடற்படை நிர்வாகக் குழு, இன்றைய தினம் தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரியர் அட்மிரல் ஜகத் குமாரவுக்கு கடற்படை தலைமையகத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், கடற்படை பாரம்பரிய முறைப்படி சிறப்பு அணிவகுப்பு மரியாதையுடன் அவருக்குக் கௌரவம் அளிக்கப்பட்டது. பின்னர், சக அதிகாரிகளிடம் விடைபெற்று கடற்படை வாகன அணிவகுப்பில் கடற்படைத் தலைமையகத்திலிருந்து புறப்பட்ட போது, சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்கள் ரியர் அட்மிரல் ஜகத் குமாரவுக்குக் கடற்படை பாரம்பரிய முறைப்படி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
1992 ஆம் ஆண்டு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 10 வது ஆட்சேர்ப்பின் கெடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்த ரியர் அட்மிரல் ஜகத் குமார, தனது 33 வருடங்களுக்கும் மேலான சேவைக் காலத்தில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகளின் கட்டளையதிகாரியாகவும், கப்பல்களின் கட்டளை அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். அத்துடன், மேலும், ரியர் அட்மிரல் ஜகத் குமார கட்டளை அதிகாரி (தீவுகள்), கடற்படை உளவுத்துறை இயக்குநர், வடமத்திய கடற்படை கட்டளையின் தளபதி, வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி, தன்னார்வ கடற்படையின் தளபதி மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி போன்ற முக்கிய பதவிகளை வகித்த இலங்கை கடற்படையின் புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியாவார்.













