சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதி நுரைச்சோலையில் கைப்பற்றப்பட்டது

14 Aug 2026

இலங்கை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து நுரைச்சோலை, பனிஅடிய பகுதியில் 2026 ஆகஸ்ட் 13 ஆம் திகதி மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதியுடன் லொறி ஒன்றைக் கைப்பற்ற நடவடிக்கை எடுத்தனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் 'விஜய' நிறுவனத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலுக்கு அமைய, நுரைச்சோலை பொலிஸாருடன் இணைந்து நுரைச்சோலை, பனிஅடிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, நபர்கள் எவருமின்றி நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றில் (01) காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான 38 மூடைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, அந்த மூடைகளுக்குள் பொதி செய்யப்பட்டு, சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டு கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 1,464 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி இவ்வாறு கைப்பற்றப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதி மற்றும் லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Accessibility Tools