மீட்பு நடவடிக்கையின் மூலம் விபத்துக்குள்ளான கடற்படைப் படகு மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல்போன கடற்படை அதிகாரியைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

17 Aug 2026

இலங்கை கடற்படைக்குச் சொந்தமான P 4447 என்ற அதிவேகத் தாக்குதல் படகு, அங்குலானைக் கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, 2026 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முற்பகல் 1140 மணியளவில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் பின்னர் ஏற்பட்ட அவசர நிலைக்குப் படகின் பணியாளர்கள் உடனடியாகச் தொழிற்பட்டுள்ள அதேவேளை, அங்குலானைப் பொலிஸார் மற்றும் அப்பகுதியின் மீனவ சமூகத்தின் உதவியுடன் படகிலிருந்த பதினொரு (11) கடற்படை வீரர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், காணாமல்போன அதிகாரியைக் கண்டறிவதற்கும், விபத்துக்குள்ளான படகை மீட்பதற்கும், இச்சம்பவத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்கும் இலங்கை விமானப் படையின் ஒருங்கிணைப்புடன், நிபுணத்துவ அறிவு மற்றும் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி கடற்படையினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதற்கமைய, 2026 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி காலை முதல் முன்னெடுக்கப்பட்ட நீண்ட தேடுதல் நடவடிக்கைக்குப் பின்னர், கடற்படை சுழியோடிகளினால் விபத்துக்குள்ளான படகு வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கடற்படை வீரர்களிடமிருந்து பெறப்பட்ட ஆரம்பக்கட்டத் தகவல்களின்படி, குறிப்பிட்ட கடல் பகுதியில் நீரில் மூழ்கியுள்ள கப்பல் அல்லது படகொன்றின் பகுதியில் மோதியே இவ்விபத்து சம்பவித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், இது தொடர்பில் இனிவரும் விசாரணைகளின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்காக நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்று தற்போது நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்திலிருந்து மீட்கப்பட்ட 11 கடற்படை வீரர்களும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்கள் நல் ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

மேலும், காணாமல்போன அதிகாரியைக் கண்டறிவதற்காகக் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தேடுதல் நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Accessibility Tools