இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுடன் 07 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

01 Nov 2026

சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) மீறி, தலைமன்னாருக்கு வடக்கே அமைந்துள்ள இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடற்பரப்பிற்குள் (Historical Waters of Sri Lanka) பிரவேசித்து, இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடிப் படகொன்றும், அதிலிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களும் இன்று (2026 நவம்பர் 01) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, தலைமன்னாருக்கு வடக்கே அமைந்துள்ள இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பல இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை வடமத்திய கடற்படை கட்டளையகம் கண்காணித்தது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ஒரு இந்திய மீன்பிடிப் படகுடன் அதிலிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களும் இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடிப் படகும், இந்திய மீனவர்களும் தலைமன்னார் இறங்குதுறைக்கு அழைத்து வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

Accessibility Tools