1.5 பில்லியனுக்கும் அதிகமான மொத்த வீதிப் பெறுமதியைக் கொண்ட 101 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் தெற்கு கடற்பரப்பில் சட்டத்தின் பிடியில்

13 Nov 2026

இலங்கை கடற்படையினர், இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சுமார் 101 கிலோகிராம் 870 கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற ஆறு (06) மூட்டைகளுடன் கூடிய உள்நாட்டு பலநாள் மீன்பிடிப் படகொன்றைக் கைப்பற்றியதுடன், ஐந்து (05) சந்தேகநபர்களையும் கடற்படையினர் கைது செய்தனர். குறித்த போதைப்பொருள் தொகையுடன் கூடிய பலநாள் மீன்பிடிப் படகு மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளுக்காக இன்று (2026 நவம்பர் 13) காலை காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் நிபுணத்துவ உதவியுடன், குறித்த போதைப்பொருள் தொகை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனைகளின்போது, 52 பொதிகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 58 கிலோகிராம் 736 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 50 பொதிகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 43 கிலோகிராம் 134 கிராம் ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. குறித்த போதைப்பொருள் தொகையின் மொத்த வீதிப் பெறுமதி 1.5 பில்லியன் ரூபாய்க்கும் (150 கோடி ரூபாய்) அதிகமாக இருக்கும் என நம்பப்படுவதுடன், கைது செய்யப்பட்ட ஐந்து (05) சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை மற்றும் பலநாள் மீன்பிடிப் படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

குறித்த போதைப்பொருள் தொகையைப் பார்வையிடுவதற்காக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் எச்என்எஸ் பெரேரா மற்றும் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமிந்த கருணாசேன உள்ளிட்ட கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகளும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் அவர்கள், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இணையாக, ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ் போதைப்பொருள் விநியோகத்தைத் தடைசெய்யும் நோக்கில், கடல்சார் வலயத்தை உள்ளடக்கிய வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாகத் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், கடற்படையினர் ஆழ்கடலில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, 101 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களைக் கைப்பற்றி சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர முடிந்ததாகவும் தெரிவித்தார்.

போதைப்பொருள் பேரழிவானது தேசியப் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி, இளைஞர் சமூகம் மற்றும் பாடசாலை மாணவர்கள் மீது பாரிய பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ், இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படைத் திணைக்களம், ஏனைய படையினர், பொலிஸார், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோருடன் இணைந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளுடன் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு, நாட்டின் நிலப்பரப்பு மற்றும் கடற்பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டிற்குள் போதைப்பொருட்கள் கொண்டுவரப்படுவதற்கு எவ்வித இடமும் வழங்கப்படமாட்டாது என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து, போதைப்பொருள் விநியோகம் மற்றும் கேள்வியைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டங்களை உருவாக்குவதுடன், தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் கருவிகளை வழங்கி இலங்கை கடற்படையின் கண்காணிப்புத் திறனையும் விரிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் அவர்கள், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கி வரும் வசதிகளின் ஊடாக, ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ், கடல் மார்க்கமாகவோ, வான் மார்க்கமாகவோ அல்லது துறைமுகங்கள் ஊடாகவோ எந்தவொரு வழியிலும் போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது எனக் குறிப்பிட்டார். மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர், அதற்கு ஆதரவளிப்போர் மற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போர் ஆகியோர் இந்த நச்சுப் போதைப்பொருள் வர்த்தகத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்.

கடலில் அனர்த்தங்களுக்கு உள்ளாகும் மீனவ சமூகத்தினரைக் காப்பாற்றுவதற்காக இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், சட்டபூர்வமான முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவ சமூகத்தினரைப் பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் அவர்கள், மீன்பிடி நடவடிக்கைகளைப் போர்வையாகக் கொண்டு சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடும் எவருக்கும் சட்டத்திலிருந்து தப்பிக்க எவ்வித வாய்ப்பும் வழங்கப்படமாட்டாது என்றும் வலியுறுத்தினார்.

அரச புலனாய்வுச் சேவை உள்ளிட்ட புலனாய்வுப் பிரிவுகளுடன் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு, பல நாட்களாக ஆழ்கடலில் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து, மிகுந்த அர்ப்பணிப்புடன் வெற்றிகரமான போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட கடற்படையினர் மற்றும் குறித்த நடவடிக்கையின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய ஏனைய அனைத்து தரப்பினருக்கும், கௌரவ ஜனாதிபதி அவர்களின் சார்பிலும் ஒட்டுமொத்த பொதுமக்கள் சார்பிலும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். மேலும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான தகவல்களை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு 1818 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்கள் ஊடாக வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் அவர்கள், போதைப்பொருள் பேரழிவு தொடர்பில் சமூகத்தினரை விழிப்புணர்வூட்டுவதில் ஊடகங்கள் ஆற்றிவரும் பங்களிப்பையும் பாராட்டினார்.

மேலும், இந்த நடவடிக்கையுடன் இணைந்து, 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் ‘முழு நாடுமே ஒன்றாக’தேசிய நடவடிக்கையின் கீழ் இலங்கை கடற்படையினரும் கடலோரக் காவல்படைத் திணைக்களமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம், 115 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மொத்த வீதிப் பெறுமதியைக் கொண்ட நச்சுப் போதைப்பொருட்களைக் கைப்பற்ற முடிந்துள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் மாத்திரம் 74 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மொத்த வீதிப் பெறுமதியைக் கொண்ட நச்சுப் போதைப்பொருட்களைக் கைப்பற்ற முடிந்துள்ளது.

Accessibility Tools