கிழக்கு கடற்பரப்பில் நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவர் கடற்படையினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டு, சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்
திருகோணமலைக்கு அப்பால் கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது நோய்வாய்ப்பட்டு, ஆபத்தான நிலையில் இருந்த இலங்கை பலநாள் மீன்பிடிப் படகொன்றின் மீனவர் ஒருவர், கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கை கடற்படையினரால் 2026 அக்டோபர் 03 ஆம் திகதி அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 2026 அக்டோபர் 01 ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட ‘வெனுஷ புதா’ எனும் பலநாள் மீன்பிடிப் படகு, திருகோணமலைக்கு அப்பால் சுமார் 11 கடல் மைல் தொலைவில் உள்ள கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அதிலிருந்த மீனவர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக கரைக்கு அழைத்து வர தேவையான உதவியை வழங்குமாறும், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினால் கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது. அதற்கமைய, குறித்த மீனவரை கரைக்கு அழைத்து வரும் இந்த நடவடிக்கைக்காக, கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட p 460 அதிவேக தாக்குதல் படகை அனுப்புவதற்கு இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, குறித்த மீனவர் கடற்படைப் படகில் ஏற்றப்பட்டதன் பின்னர், அவருக்கு ஆரம்ப முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு, துரிதமாக திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும், கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கைக்கு உரித்தான கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பிராந்தியத்திற்குள் அனர்த்தத்திற்கு உள்ளாகும் கடற்பயணிகள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அவசர நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக தயார்நிலையில் உள்ளனர்.













