வெலிசரவில் கடற்படையின் கட்டளைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டித் தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்தது
2026 ஆம் ஆண்டுக்கான கடற்படையின் கட்டளைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டித் தொடர், 2026 ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை வெலிசர, இலங்கை கடற்படைக் கப்பல் கெமுனு நிறுவனத்தின் கொமாண்டர் பராக்கிரம சமரவீர உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதன்போது, ஆண்கள் பிரிவுக்கான சம்பியன் பட்டத்தை கிழக்கு கடற்படைக் கட்டளையும், பெண்கள் பிரிவுக்கான சம்பியன் பட்டத்தை பயிற்சிக் கட்டளையும் வென்றன.
அனைத்து கடற்படைக் கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவிலான வீர, வீராங்கனைகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரில், கிழக்கு கடற்படைக் கட்டளை மற்றும் மேற்கு கடற்படைக் கட்டளை அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் 75–40 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்ற கிழக்கு கடற்படைக் கட்டளை அணி, 2026 ஆம் ஆண்டுக்கான கட்டளைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவுக்கான சம்பியன் பட்டத்தை வென்றது. இதன் இரண்டாம் இடத்தை மேற்கு கடற்படைக் கட்டளை அணி பெற்றுக்கொண்டது. அதேபோன்று, பயிற்சிக் கட்டளை மற்றும் மேற்கு கடற்படைக் கட்டளை அணிகளுக்கிடையில் நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப் போட்டியில் 30–27 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்ற பயிற்சிக் கட்டளை அணி, 2026 ஆம் ஆண்டுக்கான கட்டளைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டித் தொடரின் பெண்கள் பிரிவுக்கான சம்பியன் பட்டத்தை வென்றது. இதன் இரண்டாம் இடத்தை மேற்கு கடற்படைக் கட்டளை அணி பெற்றுக்கொண்டது.
மேலும், இப்போட்டித் தொடரின் சிறந்த வீரருக்கான கிண்ணத்தை கிழக்கு கடற்படைக் கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சப் லெப்டினன்ட் பண்டுக கஜமங்கே பெற்றுக்கொண்டார். அத்துடன், வளர்ந்துவரும் சிறந்த வீரருக்கான கிண்ணத்தை கிழக்கு கடற்படைக் கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஓடினரி சீமன் ஏஎம்ஏஆர் பண்டாரவும், வளர்ந்துவரும் சிறந்த வீராங்கனைக்கான கிண்ணத்தை பயிற்சிக் கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்திய வுமன் பிசிகல் இன்ஸ்ட்ரக்டர் ஜியுஎஸ்எஸ் கமகேவும், அனுபவமிக்க சிறந்த வீரருக்கான கிண்ணத்தை மேற்கு கடற்படைக் கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கெப்டன் அந்தோனி சௌந்தரராஜ் உம் பெற்றுக்கொண்டனர்.
மேலும், இப் போட்டித் தொடரின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக மேற்கு கடற்படைக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா கலந்துகொண்டதுடன், இலங்கை கடற்படை கூடைப்பந்தாட்டச் சங்கத்தின் தலைவர் கெப்டன் பிரபாத் நாணயக்கார உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.













