இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான இருதரப்பு கடற்படை பயிற்சி மேற்கு கடலில் நடைபெறவுள்ளது

இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு கடற்படை பயிற்சி 2022 மார்ச் 26 ஆம் திகதி கொழும்பு கடற்பரப்பில் தொடங்கி 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

2022 2022 மார்ச் 23ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பலான சர்தாவுக்கு (INS SHARDA) சொந்தமான IN 715 என்ற Advance Light Helicopter வகையின் ஹெலிகாப்டர் மற்றும் இலங்கை கடற்படைக் கப்பலான சயுரல இந்தப் பயிற்சியில் ஈடுபடுகிறது. அதன் படி கப்பல்களில் ஹெலிகாப்டர் தரையிறங்கள் மற்றும் மீண்டும் ஏவுதல், கடல்சார் நடவடிக்கைகளின் போது விமானம் மற்றும் கப்பல்களுக்கு இடையே நடைமுறை பயிற்சிகளை நடத்துதல் ஆகியவை இந்த பயிற்சியில் அடங்கும். மேலும், இந்தப் பயிற்சியில் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த பணியாளர்கள் குழுவும் இணைந்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனித கடத்தல், அத்துடன் இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து கூட்டு நடவடிக்கைகளில் செயல்பாட்டு திறன் மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துவதை இந்த கூட்டு கடற்படைப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்தகைய கூட்டு கடற்படைப் பயிற்சிகள் எதிர்காலத்தில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களுக்கு வெற்றிகரமான கூட்டுத் தீர்வுகளை வழங்கும்.