தேசிய போர்வீரர்கள் நினைவேந்தல் விழா அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது

2023 தேசிய போர்வீரர்கள் நினைவேந்தல் விழா, முப்படைகளின் சேனாதிபதி, அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் 2023 மே 19 ஆம் திகதி பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்து கொண்டார்.

ரணவிரு சேவா அதிகாரசபை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், நாட்டின் இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ஆயுதப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் வீரவீரர்களை நினைவு கூறும் வகையில் விசேட போர்ப்பறை இசைக்கப்பட்டது.

சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை தாய்நாட்டிலிருந்து ஒழிப்பதன் மூலம் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தேசிய போர்வீரர்களின் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு அன்றைய மனிதாபிமான நடவடிக்கையின் வெற்றிக்கு பங்களித்த இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளாக கடமையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரண்னாகொட மற்றும் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலக ஆகியோர் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், இந் நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரஞ்சன் லமாஹேவகே, ரணவிரு சேவா அதிகார சபையின் தளபதி மேஜர் ஜெனரல் (ஓய்வு) நந்தன சேனாதீர உட்பட முப்படைகள், பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் ரணவிரு சேவா அதிகார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், உயிரிழந்த வீரர்களின் உறவினர்கள் படைவீரர்கள் நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் 2023 படைவீரர்கள் நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.