ஐஸ் மற்றும் கொக்கெய்ன் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடி படகொன்று இலங்கை கடற்படையினரின் உதவியுடன் மாலத்தீவு கடலோர காவல்படையினரால் கைப்பற்றியது

இலங்கை கடற்படையினருக்கும் மாலைதீவு கடலோர காவல்படையினருக்கும் இடையிலான வெற்றிகரமான புலனாய்வுப் பரிமாற்றத்தின் விளைவாக, 344 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருள் (Crystal Methamphetamine) மற்றும் 124 கிலோகிராம் கொக்கேயின் போதைப் பொருள் கொண்டு சென்ற பல நாள் மீன்பிடிப் படகுடன் ஐந்து சந்தேக நபர்கள் கடந்த 2024 நவம்பர் 23ம் திகதி மாலத்தீவு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

IMUL-A-0924-MTR என்ற பதிவெண் கொண்ட இலங்கைக்குச் சொந்தமான பல நாள் மீன்பிடி படகு மாலத்தீவு பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நுழைந்துள்ளது என்றும், ஏதேனும் தவறு அல்லது பேரழிவு காரணமாக அந்தக் படகு மேற்படி கடல் பகுதிக்குள் நுழைந்ததா என்று உறுதிப்படுத்துமாறு மாலைத்தீவு கடலோரக் காவல்படையின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், கடற்படை தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவித்துள்ளது.

இதன்படி, உடனடியாக குறித்த கப்பல் தொடர்பில் கடற்படையினரிடம் உள்ள தகவல்களைச் சோதனையிட்ட போது கடற்படையிடம் உள்ள புலனாய்வுத் தகவலின்படி, IMUL-A-0924-MTR என்ற பதிவெண் கொண்ட பல நாள் மீன்பிடிப் படகு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்ற படகொன்று எனத் தெரிய வந்துள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தலின் பேரில் விரைவாகச் செயற்பட்ட கடற்படையினர், ஒருங்கிணைந்த நடவடிக்கையை எளிதாக்குவதற்காக மாலைதீவு கடலோரக் காவல்படையினருடன் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டனர்.

இலங்கை கடற்படை வழங்கிய புலனாய்வுத் தகவலின்படி, மாலத்தீவு கடலோர காவல்படை 2024 நவம்பர் 23 ஆம் திகதி நாட்டின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நுழைந்த பல நாள் இழுவை படகை குறிவைத்து சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில் தோராயமாக 344 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருள் (Crystal Methamphetamine) மற்றும் சுமார் 124 கிலோ கிராம் கோகோயின் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் படி ஐந்து (05) சந்தேகநபர்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் குறித்த படகு மாலைதீவு கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21 மற்றும் 37 வயதுடைய தெவிநுவர மற்றும் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதுடன், கடற்படை புலனாய்வுப் பிரிவினரும் மாலைதீவு புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இந்த போதைப்பொருள் இலங்கைக்கு அனுப்பப்பட்டதா அல்லது பிராந்தியத்தில் உள்ள வேறு நாட்டிற்கு அனுப்பப்பட்டதா என விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மீன்பிடித் தொழில் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய பிராந்திய கடல்சார் பங்குதாரர்களுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கடற்படை தொடர்ந்து பங்களித்து வருகிறது.