வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன

இலங்கையை பாதித்துள்ள மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ மற்றும் அத்துரலிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட கடற்படையின் அனர்த்த நிவாரணக் குழுக்கள் இன்றும் (2024 நவம்பர் 26) அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, அதிக மழை காரணமாக நில்வலா ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகள் நிரம்பி வழியும் மட்டத்தை எட்டியுள்ளதால், வெள்ள அபாயத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மூன்று (03) கடற்படையின் அனர்த்த நிவாரணக் குழுக்கள் உயிர்காக்கும் உபகரணங்களுடன் அணுப்பப்பட்டன. குறித்த நிவாரணக் குழுக்கள் இன்று காலை (2024நவம்பர் 26) அக்குரஸ்ஸ பிரதேசத்தில் அத்துரலிய, பலகாவல மற்றும் அறம்பத்வல ஆகிய கிராமங்களில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை குழந்தைகள் குழுவிற்கும், உள்ளூர் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தேவையான போக்குவரத்து வசதிகளை கடற்படை படகுகள் மூலம் வழங்கின.

மேலும், வெள்ள அபாயத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குவதற்காக கடற்படையின் நூற்று முப்பத்து நான்கு (134) கூடுதல் நிவாரணக் குழுக்கள் தேவைக்கேற்ப தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.