உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 65 பேர் கடற்படையினரால்கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, கடந்த பதினைந்து நாட்களில் (2025 ஜூலை 09 முதல் 22 வரை) உள்ளூர் நீர்ப்பரப்புகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பதினாறு (16) டிங்கி படகுகளையும் அறுபத்தைந்து (65) நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை, வடமேற்கு கடற்படை கட்டளை மற்றும் வடமத்திய கடற்படை கட்டளை ஆகியவற்றால் திருகோணமலை, சல்பேரு, உப்புறல், பொல்மல்குடா, நிலாவெலி, மலைமுந்தால், புத்தளம், இப்பன்தீவு மற்றும் மன்னார் வடக்கு ஆகிய கடலோர மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துதல், மின் விளக்குகளைப் பயன்படுத்துதல் மற்றும் செல்லுபடியாகும் உரிமங்கள் இல்லாமல் கடலட்டைகள் மற்றும் சிப்பிகள் கொண்டு செல்வது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக அறுபத்தைந்து (65) சந்தேக நபர்களையும், பதினாறு (16) டிங்கிகளையும், ஐந்து (05) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி படகுகளுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, ஈச்சிலம்பட்டு, புத்தளம், குச்சவெளி, கோட்பே, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.