சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் 1180 கிலோகிராம் மற்றும் 20,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கற்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் 12 ஆம் திகதி இரவு கற்பிட்டியின் சேரக்குளிய களப்பு பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து நூற்று எண்பது (1180) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் இருபதாயிரம் (20,000) வெளிநாட்டு சிகரெட்டுகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும், இரண்டு (02) டிங்கி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனம், கற்பிட்டியின் சேரக்குளிய களப்பு பகுதியில் 2025 ஆகஸ்ட் 12 ஆம் திகதி இரவு நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இரண்டு (02) சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகள் சோதனை செய்யப்பட்டன. இதன் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட முப்பத்தெட்டு (38) பைகளில் பொதிச்செய்யப்பட்ட ஆயிரத்து நூற்று எண்பது (1180) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் இருபதாயிரம் (20,000) வெளிநாட்டு சிகரெட்டுகள் இரண்டு (02) சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 23 மற்றும் 45 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர்கள், டிங்கி படகுகள், பீடி இலைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.