தொழில்நுட்பக் கோளாறு காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவு நோக்கி மிதந்து வந்த இந்திய மீன்பிடிக் கப்பலில் இருந்து 03 மீனவர்களை கடற்படை பாதுகாப்பாக மீட்டது
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்து யாழ்ப்பாணம் அனலைதீவு நோக்கி மிதந்து வந்த இந்திய மீன்பிடிக் கப்பலில் இருந்து மூன்று (03) மீனவர்கள், இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட வெற்றிகரமான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் 2025 அக்டோபர் 16 ஆம் திகதி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்திய மீன்பிடிக் கப்பலில் எரிபொருள் தீர்ந்து, அது ஆபத்தில் சிக்கி அனலைத்தீவு நோக்கி நகர்ந்தது என தெரியவந்ததுடன், மீன்பிடிக் படகில் இருந்த மூன்று இந்திய மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்க கடற்படை நடவடிக்கை எடுத்தது. மேலும் மீனவர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது கடற்படையினரால் மீட்கப்பட்ட மூன்று (03) இந்திய மீனவர்களும் இந்தியாவின் தமிழ்நாட்டின் மல்லிப்பட்டணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். அவர்களை காரைநகருக்கு அழைத்து வந்த பின்னர் கடற்படை அவர்களுக்கு தேவையான மேலதிக உதவிகளை வழங்கியது. ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, மூன்று (03) இந்திய மீனவர்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும், இலங்கை தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்தில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு தேவையான நிவாரணங்களை வழங்க கடற்படை தொடர்ந்து தயார் நிலையில் உள்ளது.