சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 793 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படை, கடலோர காவல்படை மற்றும் புத்தளம் மதுவரி சிறப்புப் பிரிவுடன் இணைந்து, கல்பிட்டி, இப்பன்திவு தீவிலும் நீர்கொழும்பு மாஓயா களப்பு பிரதேசத்திலும் 2025 அக்டோபர் 28 ஆம் திகதி சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எழுநூற்று தொண்ணூற்று மூன்று (793) கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய, புத்தளம் மதுவரி சிறப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் கல்பிட்டி, இப்பன்திவு தீவில் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, தீவின் ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதினைந்து (15) பைகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அங்கு, பைகளில் பொதிசெய்யப்பட்ட சுமார் நானூற்று எண்பத்து நான்கு (484) கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.
இதேபோல், மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கெலனி, கடலோர காவல்படையுடன் இணைந்து நீர்கொழும்பின் மாஓயா களப்பு பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அங்கு எட்டு (08) பைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் முன்னூற்று ஒன்பது (309) கிலோகிராம் பீடி இலைகளுடன் (01) டிங்கி படகு கைப்பற்றப்பட்டது.
அதன்படி, இந்த நடவடிக்கைகளின் மூலம் வடமேற்கு கடற்படை கட்டளையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் புத்தளம் மதுவரி சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன, மேலும் மேற்கு கடற்படை கட்டளையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அத்தியட்சகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.







