41 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சாவுடன் வடக்கு கடலில் 02 சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் 2025 அக்டோபர் 30 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று எண்பத்தைந்து (185) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் கஞ்சாவை ஏற்றிச் சென்ற (01) ஒரு டிங்கியுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி (01) ஆகியன கைப்பற்றப்பட்டன.

'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு மற்றும் 'போதையில்லா நாடு - ஆரோக்கியமானபிரஜைகள் வாழ்க்கை' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனம், அந்த நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட ஒரு கடலோர ரோந்து கப்பலை ஈடுபடுத்தி, 2025 அக்டோபர் 30 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள உள்ளூர் கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று பயணிப்பதைக் கவனித்து சோதனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில், அந்த டிங்கி படகில் ஆறு (06) பைகளில் எண்பத்தைந்து (85) பொதிகளில் பொதி செய்யப்பட்ட நூற்று எண்பத்தைந்து (185) கிலோகிராம் (600) கிராம் கஞ்சாவை ஏற்றிச் சென்ற, இரண்டு (02) சந்தேக நபர்களும் அந்த டிங்கி (01) படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 30 வயதுடைய யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மேலும், சந்தேக நபர்கள், கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு நாற்பத்தொரு (41) மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட நடவடிக்கைகள் மூலம், 5267 கிலோகிராமை விட அதிகமான கஞ்சாவை கைப்பற்றி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு அனுப்ப கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.