தேசிய அனர்த்த சூழ்நிலைக்கு ஏற்ப கடற்படை மேற்கொண்ட அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் 10,099 பேருக்கு நிவாரணம் வழங்கினர்
தீவில் ஏற்பட்ட சீரற்ற வானிலையின் காரணமாக, ஏற்பட்ட தேசிய அனர்த்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், கடற்படை 2025 நவம்பர் 22 முதல் முழு தீவையும் உள்ளடக்கிய அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்றுவரை (2025 நவம்பர் 30,) தீவின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மூலம் 10,099 பேருக்கு அனர்த்த நிவாரணம் வழங்கியுள்ளதுடன் இதைத் தொடர்ந்து மேலும் நடவடிக்கைகள் தொடர்ந்துக் கொண்டு வருகின்றன.
அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையினால்: திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மூலம், வெள்ள நிலைமை காரணமாக உயிராபத்தில் இருந்த 195 பேர் மீட்கப்பட்டு 1632 பேர் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டதுடன், வடமேற்கு கடற்படை கட்டளையால் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மூலம் 580 பேர் மீட்கப்பட்டு 3924 பேர் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்கிடையில், மேற்கு கடற்படை கட்டளையினால்: கொழும்பு, கண்டி, இரத்தினபுரி, புத்தளம், குருநாகல், கேகாலை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மேற்கொண்ட அனர்த்த நிவாரண நடவடிக்கைகளின் மூலம், 303 பேரை மீட்டு, 440 பேரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். மேலும் தெற்கு கடற்படை கட்டளையினால், காலி மாவட்டத்தில் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு, 22 பேரை மீட்டு, 355 பேரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
வட மத்திய கடற்படை கட்டளையினால், அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மூலம் 250 பேரை மீட்டு 903 பேரை பாதுகாப்பாக கொண்டு சென்றதுடன், தென்கிழக்கு கடற்படை கட்டளையினால், அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக உயிராபத்தில் இருந்த 1444 பேர் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையினால், பரந்தன் பகுதியில் துயரத்தில் இருந்த 13 பேரையும் பாதுகாப்பாக மீட்க குழுக்களை அனுப்பி வைத்தனர்.
























































