முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் ரூ.31 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் 2025 டிசம்பர் 17 ஆம் திகதி காலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, போக்குவரத்துக்காக தயாராக இருந்த சுமார் நூற்று நாற்பது (140) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் ஒரு கெப் வண்டி (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் “போதையற்ற நாடு -ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்கை” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அதன்படி, முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கோட்டாபய நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான வாடகை வண்டி ஒன்று சோதனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில், நான்கு (04) பைகளில் போக்குவரத்துக்குத் தயாராக இருந்த சுமார் நூற்று நாற்பது (140) கிலோ நானூற்று அறுபது (460) கிராம் வெளிநாட்டு கஞ்சா தொகையுடன், கெப் வண்டியை கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கஞ்சா இருப்பின் மொத்த தெரு மதிப்பு 31 மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கஞ்சா தொகை மற்றும் கெப் வண்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.