சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 53 பேர் கைது செய்யப்பட்டனர்
இலங்கை கடற்படையினர் 2026 மார்ச் 03 முதல் 18 வரை நடத்திய விசேட நடவடிக்கைகளில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 53 நபர்கள், 13 டிங்கிகள் மற்றும் 4 டிராக்டர்கள் கைப்பற்றப்பட்டன. தடைசெய்யப்பட்ட வலைகள், வெடிபொருட்கள், மின்விளக்குகள், அனுமதிப்பத்திரமற்ற இரவு நேர சுழியோடுதல், விஞ்சுகள் மற்றும் டிராக்டர்களை பயன்படுத்திய குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி, கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளால் வெடித்தலதீவு, சவுத்பார், வங்காலை ,புத்தளம், உடப்புவ, உடையூர்புதி, வாகரை கண்டலடி, களுவான்கேணி, பால்ச்சேனை, சவுக்கடி, யாழ்ப்பாணம் மண்டைதீவு, திருகோணமலை, கின்னியா, கொக்கிளாய் மற்றும் காலி அக்குரலை கடற்கரை, கடல் பகுதிகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக ஐம்பத்து மூன்று (53) நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.
மேலும், கடற்படையால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், வர்த்தக வெடிபொருட்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், டிராக்டர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இலுப்புக்கடவை பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை, மன்னார், புத்தளம், வாழைச்சேனை, மட்டக்களப்பு, மண்டைத்தீவு, நானாட்டான், கின்னியா மற்றும் முல்லைத்தீவு மீன்வள ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் காலி கடலோரக் காவல்படை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.















