அணிகளுக்கிடையிலான மகளிர் முதல் தர ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரின் வெற்றி கடற்படைக்கு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிகளுக்கிடையிலான மகளிர் 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டி 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி வெலிஸர கடற்படை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றதுடன் அங்கு இலங்கை கடற்படை மகளிர் விளையாட்டுக் கழகம் இராணுவ மகளிர் 'B' அணியை வென்று போட்டித்தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது.

லீக் முறையின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில் தீவகத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு மகளிர் அணிகள் கலந்துகொண்டன. இலங்கை கடற்படை மகளிர் கிரிக்கெட் அணி 07 போட்டிகளை எதிர்கொண்டு அதில் 06 போட்டிகளில் வெற்றி பெற்று 30 போனஸ் புள்ளிகளுடன் சம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த ஆண்டும் கடற்படை மகளிர் கிரிக்கெட் அணி இப் போட்டித் தொடரில் வெற்றி பெற்றதுடன் தொடர்ந்து இரண்டு முறை இப் போட்டித்தொடரில் வெற்றி பெற்று கடற்படைக்கு புகழைக் கொண்டு வந்துள்ளது.

இறுதிப் போட்டி மழையால் 22 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது, முதலில் துடுப்பெடுத்தாடிய இராணுவ மகளிர் 'பி' அணி 22 ஓவர்கள் முடிவில் 09 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கடற்படை மகளிர் அணி D/L முறைப்படி 10 ஓவர்கள் முடிவில் 41 ஓட்டங்களைப் பெற்று, விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியில் 04 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்கள் உட்பட முழுப் போட்டியிலும் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய கடற்படையின் இனோகா ரணவீர போட்டியின் சிறந்த பந்துவீச்சாளராகத் திகழ்ந்தார்.

மேலும், இலங்கை கடற்படை விளையாட்டு வாரியத்தின் தலைவராக பணியாற்றும், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படை விளையாட்டுக் அணிகளை மேம்படுத்துவதற்கான சிறப்பு பயிற்சி திட்டங்களை வழங்கப்பட்டதுடன் விளையாட்டுத் துறையின் உள்கட்டமைப்புகளின் முன்னேற்றங்களும் மேற்கொள்ளப்பட்டது. இந்த காரணங்கள் இவ்வாரான பல சாதனைகளை அடைவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது.