08வது கெரம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கடற்படை வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்

சர்வதேச கெரம் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த (08th Carrom World Championship -2022) போட்டித்தொடர் 2022 அக்டோபர் 03 முதல் 07 வரை மலேசியாவின் லங்காவியில் நடைபெற்றதுடன் இப் போட்டித்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபெற்ற கடற்படை வீரர் நிஷாந்த பெர்னாண்டோ மற்றும் கடற்படை வீராங்கணி ஜோசப் ரோஷிடா ஆகியோர் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

இதன்படி, 18 நாடுகள் பங்குபற்றிய இந்த சம்பியன்ஷிப் போட்டியின் ஆண் குழு நிகழ்வில் இலங்கை கெரம் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், அணி நிகழ்வைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் நிஷாந்த பெர்னாண்டோ அங்கு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். மேலும், கேரம் சம்பியன்ஷிப் ஆண் இரட்டையர் பிரிவில் இலங்கை ஆண் அணி மூன்றாவது இடத்தையும், கடற்படை வீரர் நிஷாந்த பெர்னாண்டோ வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

அத்துடன், 11 தடவைகள் எதிரணிக்கு வாய்ப்பளிக்காமல் வெற்றிபெற்ற கடற்படை வீரர் நிஷாந்த பெர்னாண்டோ, அந்தச் சம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி ‘Highest Number of Slams’ கோப்பையை வென்று கடற்படைக்கு மாத்திரமன்றி நாட்டுக்கே பெரும் புகழை பெற்றுத் தந்தார்.

இப் போட்டியின் மகளிர் அணி நிகழ்வில் இலங்கை அணி மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீராங்கணி ஜோசப் ரொஷிடா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், கடற்படை விளையாட்டுத் துறையில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, விளையாட்டு வீரர்களுக்கான நலன்புரி வசதிகளை மேம்படுத்துதல், விசேட பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல் போன்ற வேலைத்திட்டங்கள் காரணமாக கடற்படை விளையாட்டு வீரர்கள் தங்கள் தாய்நாட்டிற்காக தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளை பெற்றுள்ளனர்.